செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கலைஞர் மு.கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் கடந்த மூன்று வருடங்களுக்கும் சேர்த்து மூன்று பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 2020க்கான விருது முனைவர் ம.ராசேந்திரனுக்கும், 2021க்கான விருது பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியனுக்கும் 2022ம் ஆண்டுக்கான விருது பிரெஞ்சு நாட்டின் அறிஞர் ழான் லூயிக் செவ்வியார் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தினத்தை முன்னிட்டு கூறியதாவது "சென்னை மேயராக நான் இருந்தபொழுதுதான் மதராஸ் என்ற பெயரை சென்னையாக, அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞர் மாற்றினார். இன்று ஊரெங்கும் "நம்ம சென்னை, நம்ம பெருமை" என்று உணர்வுப் பெருக்குடன் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.தமிழர்கள் வாழும் இந்த தாய்த் திருநாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அரசு திமுக அரசு. அண்ணா தலைமையில் இது நடந்தது என்பதும் வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.
அதேபோல் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த தலைநகருக்கு சென்னை என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரைச் சூட்டியதும் திமுக அரசுதான்.இதேபோல், மூவாயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத் தந்ததும் திமுக அரசுதான்.உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என உலகின் மொழியியலாளர்களும், பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் போற்றுகின்றனர்" என கூறினார்.
மேலும் பேசிய அவர் "செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித் தன்மையையும் அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும், ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக இந்த நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதற்குத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. ஏனென்றால், இது தமிழ் மொழிக்கான அமைப்பு. ஏனென்றால் இன்று நடப்பது தமிழின் ஆட்சி, தமிழின ஆட்சி" என்றும் கூறினார்.