தூத்துக்குடியில் தனியார் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் பகுதி பொதுமக்கள் நேற்று முன் தினம் பள்ளி சீருடைகள் அணிந்து குழந்தைகளுடன் வந்து தூத்துக்குடி சிதம்பரநகர் ஜங்சனில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
நேற்று முன் தினம் காலை முதல் மாலை வரையில் நடந்த இந்த போராட்டத்தில் குமரெட்டியாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ மாணவியர் பள்ளிகளை புறக்கணித்து கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பள்ளி மாணவ மாணவியரையும் ஊர் பொதுமக்கள் ஈடுபடுத்தியிருந்தனர். மேலும் சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர், தேசிய இளைஞர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மாலையில் உண்ணாவிரத போராட்டம் நிறைவடையும் நிலையில் அவர்கள் திடீரென சாலையின் எதிர்புறம் உள்ள எம்.ஜி.ஆர். பூங்காவிற்குள் குழந்தைகள், மாணவ மாணவியருடன் குடியேறினர். மேலும் சிப்காட் விரிவாக்கத்தை நிறுத்தவேண்டும் என கோரி குடியேறும் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்து அங்கேயே தங்கினர்.
நேற்று காலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சில மாணவர்கள் அவர்களுடன் இணைந்தனர். இந்நிலையில் காலையில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் உயரதிகாரிகள் உத்தரவு வரப்பெற்றதால் போலீசார் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். போராட்டம் தொடர்ந்ததால் ஏஎஸ்பி செல்வன்நாகரத்தினம் தலைமையிலான போலீசார் அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அங்கு இருதரப்பினருக்கும் இடையே சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் அவர்களை கைது செய்த போலீசார் வேன்களில் ஏற்றி ஆசிரியர் காலனி மற்றும் பிரையண்ட்நகர் பகுதிகளில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் 43 பேர், பெண்கள் 142 பேர் உள்ளிட்ட 280 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- நாகேந்திரன்