சேலம் ரவுடி கதிர்வேல் என்கவுண்ட்டர் வழக்கை சிபிஐ காவல்துறையினர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சேலத்தை அடுத்த தாதனூர் அருகே உள்ள தேவாங்கர் காலனியைச் சேர்ந்த சேட்டு மகன் கதிர்வேல். கொலை, மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இவர், மே 2ம் தேதியன்று காலை காரிப்பட்டி காவல்துறையினரால் என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த என்கவுண்ட்டர் போலியானது என்று பல தரப்பிலிருந்தும் கருத்துகள் எழுந்தன. காவல்துறையினரே திட்டமிட்டு கதிர்வேலை கொன்றுவிட்டு, தாக்க முயற்சித்ததால் சுட்டுக்கொன்றோம் என்று கதை விடுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக சேலம் மாவட்ட மூன்றாவது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சரவணபவன் தலைமையில் நீதி விசாரணை நடந்து வருகிறது. டிஎஸ்பி அண்ணாமலை வழக்குப்பதிவு செய்து நேரடி விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில் வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், ஹரிபாபு, தமயந்தி ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர், என்கவுண்ட்டர் நடந்ததாகக் கூறப்படும் இடம், கதிர்வேலின் உறவினர்கள் ஆகியோரிடம் கடந்த இரு நாள்களாக விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து அ.மார்க்ஸ் செய்தியாளர்களிடம் கூறியது:
முறுக்கு வியாபாரி கணேசன் கொலை வழக்கில் ரவுடி கதிர்வேல் முன்கூட்டியே காவல்துறையில் சரண் அடைந்துள்ளார். மாநகர காவல்துறையினர் அவரை கைது செய்து, காரிப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் கதிர்வேலை, காவல்துறையினர் திட்டமிட்டு என்கவுண்ட்டர் செய்ததாக நாடகம் ஆடுகின்றனர். இந்த வழக்கை உள்ளூர் காவல்துறையினர் விசாரித்தால் உண்மை வெளி வராது. கதிர்வேல் என்கவுண்ட்டரில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கதிர்வேலின் குடும்பத்தினர் மிகவும் ஏழ்மையானவர்கள். இதனால் அவருடைய குடும்பத்தினருக்கு தமிழக அரசு 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். என்கவுண்ட்டர் நடந்ததாகக் கூறப்படும் குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில் நேரில் சென்று விசாரித்தோம். அங்கு வசிக்கும் நபர்கள், என்கவுண்ட்டர் சம்பவம் நடந்ததே தெரியாது என்கிறார்கள்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரி டிஎஸ்பி அண்ணாமலை, எஸ்பி தீபா கனிக்கர் ஆகியோரை சந்திக்க சென்றபோது அவர்கள் எங்களை சந்திக்க மறுத்துவிட்டனர். கதிர்வேல் தாக்கியதாக கூறப்பட்ட ஆய்வாளர் சுப்ரமணியம், எஸ்ஐ மாரி ஆகியோரையும் விசாரிக்க முடியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் சில ஆதாரங்களை திரட்டி உள்ளோம். இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு மார்க்ஸ் கூறினார்.