எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மே 26 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஐடிஐ., பாலிடெக்னிக் கல்லூரி, பிளஸ்1 சேர்க்கைக்குத் தயாராகி வருகின்றனர். இதற்காக மாணவர்கள் நலன் கருதி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை (மே 26) முதல் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்கக அதிகாரிகள் கூறியது: “எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, அந்தந்த உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகள் மூலம், தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைத் தேர்வுத்துறை இயக்கக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதேபோல், தனித்தேர்வர்கள் எந்தெந்த மையங்களில் தேர்வு எழுதினார்களோ அந்த மையங்களின் தலைமை ஆசிரியர்கள் தனித்தேர்வர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் உள்ள தேர்வரின் பெயர், பிறந்த தேதி, தேர்வரின் தலைப்பெழுத்து (இனிஷியல்), புகைப்படம், பயிற்று மொழி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கவனமாக சரிபார்க்க வேண்டும்.
இதையடுத்து, மே 26 ஆம் தேதி பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்யத் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின், பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்தால் அறிவிக்கப்படும் குறிப்பிட்ட நாளில் திருத்தங்கள் செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும். தேர்வர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்போது, மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண் குறிப்பிடப்படும் இடத்தில், 'உண்மைச் சான்றிதழைப் பார்க்க' என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.” இவ்வாறு தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்கக அதிகாரிகள் கூறினர்.