தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.
நேற்று (12.03.2021) மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, கோவை தெற்கு - கமல்ஹாசன், ஆலந்தூர் - சரத்பாபு, தி.நகர் - பழ.கருப்பையா, மயிலாப்பூர் - ஸ்ரீப்ரியா, கன்னியாகுமரி (எம்.பி தொகுதி) - சுபா சார்லஸ், எடப்பாடி - தசாப்பராஜ், சிங்காநல்லூர் - மகேந்திரன் என பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட இருக்கிறார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக நடிகை ஸ்ரீப்ரியா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு அவர் மயிலாப்பூரில் முதற்கட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை தொடங்கினார்.