தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (21/03/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் தீர்மானத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே பேட்டி அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் மவுனம் தமிழர்கள் இடையே பேரதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்ற போது ஈழத் தமிழர்களின் மீதான அக்கறையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதற்கான எந்தவித அறிகுறியும் வெளியே வரவில்லை. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஏற்கனவே நடைபெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியா இலங்கைக்கு எதிராகவே வாக்களித்துள்ளது என்பதைக் கூட பா.ஜ.க. அரசு மறந்தது ஏன்? தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அனுப்பி, 'இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிட வாக்களித்திடுக' என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.
தமிழகத்தின் மக்கள் பிரதிநிதிகளின் கருத்தினைக் கூட கேட்காமல், இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிடுவது, தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரானது. இலங்கைத் தமிழர்களை அவமதித்து, இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எடுத்திட வேண்டாம்" என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.