
கடந்த ஓராண்டாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இலங்கையில் ஒரு சவரன் தங்க நகை ஒருலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு பிரெட் பாக்கெட் 200 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இந்த அளவுக்கு நிதி சிக்கலைச் சந்தித்துள்ள இலங்கைக்குக் கூடுதல் பொருளாதார பாரத்தை கூட்டியுள்ளது உக்ரைன்-ரஷ்ய போர். பெட்ரோல், டீசல், பருப்பு, அரிசி, எண்ணெய் என அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக அதிகரித்து மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது. இலங்கை பொதுமக்கள் கடும்விலை உயர்வால் வாழ்வை நகர்த்த முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தலைமன்னாரிலிருந்து தமிழகம் தப்பித்து வர முயன்ற 6 பேரை தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் இந்தியக் கடலோர காவல்படை அதிகாரிகள் பிடித்திருக்கிறார்கள்.

சந்தேகத்திற்கு இடமாக ஒரு ஆண், இரண்டு பெண்கள், ஒரு கைக்குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் வாழ்வை நகர்த்த முடியாமல் இலங்கையிலிருந்து தமிழகம் வர முயன்ற நிலையில், அவர்களை இந்தியக் கடற்படையினர் பிடித்துள்ளனர். பிடிக்கப்பட்டவர்களை மண்டபம் பகுதியில் உள்ள இந்தியக்கடலோர காவல்படை அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் மேலும் பலர் தமிழகம் நோக்கி வரலாம் என்பதால் தமிழக கடலோர எல்லையில் கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.