Skip to main content

‘பாம்பன் புதிய ரயில் பாலம் 100% தயார்’ - தெற்கு ரயில்வே தகவல்!

Published on 27/12/2024 | Edited on 27/12/2024
Southern Railway Information on Pampan New Rail Bridge

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்கு பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த பாலத்தை கடந்த நவம்பர் 13ஆம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து இந்தியன் ரயில்வே வாரியத்தின் செயலருக்கு ஆய்வறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், பாலத்தை திட்டமிடுவதற்கு முன்பு, ரயில்வே வாரியம் தொழில்நுட்ப ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும். ஆனால், பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்த பாலத்தில் அரிப்பு, துருப்பிடித்தல் பிரச்சனைக்கான தீர்வு காண போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாலம் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக வழங்கப்பட்டுள்ள இண்டர்லாக் சர்கியூக்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இவை பாதுக்காப்பற்ற சூழலை வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாலத்தில் குறைப்பாடுகள் இருப்பதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதற்கிடையே, பாலத்தின் சோதனை மற்றும் சரிபார்ப்பு முழுமையாக முடிந்த பிறகே, ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பாலத்தின் வடிவமைப்பைச் சென்னை ஐஐடி மற்றும் மும்பை ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து தரமதிப்பீடு வழங்கியுள்ளதாகவும், புதிய ரயில் பாலம் தரமான வடிவமைப்போடு கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாம்பன் புதிய பாலத்தில் குறைபாடுகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்தியன் ரயில்வேயினுடைய கட்டுமான துறை அதிகாரிகள் குழு, ஆய்வு செய்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கூறிய குறைபாடுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் 100 சதவீதம் முடிந்திருப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பழைய பாலத்தைப் போலவே புதிய ரயில் பாலமும் 100 ஆண்டை கடந்தும் நிற்கும் எனவும், கப்பல் செல்லும்போது 3 நிமிடங்களிலேயே தூக்கு பாலம் மேலே எழும்புவதற்கான மோட்டார் வசதி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்த புதியா பாலத்தில் 75 கி.மீ வேகத்தில் ரயில் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது எனவும் 55 கி.மீ காற்று வீசினாலே எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்