புதுக்கோட்டை அருகில் உள்ள தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. முன்னாள் ஊராட்சித் தலைவரான இவரது மகன் சசிகுமார். இவர், திருப்பூரில் தனியார் நிறுவனம் வைத்து தொழில் செய்துவருகிறார்.
இந்நிலையில், தனது நிறுவனத்தின் வேலை சம்மந்தமாக சவுதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று (01.12.2021), சசிகுமாருக்கு தந்தை சுப்பையா இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ‘மாலைக்குள் நான் வந்துவிடுவேன்’ என்று சசிக்குமார் கூறியுள்ளார்.
இதையடுத்து, சவுதி அரேபியாவிலிருந்து திருச்சிக்கு விமானம் இல்லாததால் உடனே விமானம் மூலம் நேற்று காலை பெங்களூரு வந்த சசிக்குமார், குறித்த நேரத்தில் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அங்கிருந்து சுமார் ரூ. 5 லட்சம் செலவில் தனி ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பிற்பகலில் வந்திறங்கினார்.
பின்னர், அங்கிருந்து தென்னங்குடிக்கு காரில் சென்று தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாலை, புதுக்கோட்டையிலிருந்து பெங்களூரு திரும்புவதற்கு ஹெலிகாப்டர் தயாரான நிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதையடுத்து பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டு பெங்களூரு சென்றது.
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் திடீரென ஹெலிகாப்டர் வந்து இறங்கியதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அதனை ஆச்சரியத்துடன் வந்து பார்த்துச் சென்றனர். மேலும், தந்தைக்கு இறுதி காரியங்கள் செய்வதற்காக மகன் ஹெலிகாப்டரில் வந்த நிகழ்வும் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.