திருடிய நகைகளை பங்கு பிரிப்பதில் ஒருவர் கொலை, ஒராண்டுக்குப் பிறகு அந்தக் கொலைக்குக் காரணமான பாலிடெக்னிக் மாணவரைக் கொன்று சிதைத்து ஆற்றுக்குள் புதைத்து பழி தீர்த்துக் கொண்டனர், கொலையுண்டவர்களின் உறவினர்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கொத்தங்குளத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் திருடுவதையேத் தொழிலாகக் கொண்ட முனியாண்டி நண்பர்களுடன் சேர்ந்து சில இடங்களில் கொள்ளையடித்து ராமேசுவரத்தில் வைத்து பங்கு பிரித்துள்ளனர். இதில் பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட கொலை செய்யப்பட்டார் முனியாண்டி. கடந்த ஒராண்டுக்கு முன்பு நடைப்பெற்ற இச்சம்பவத்தில் பாலிடெக்னிக் மாணவரான அஜித்குமார் கைது செய்யப்பட்டு சிறார் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி திருப்புவனத்திலுள்ள தனது வீட்டிலிருந்து பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லையென்பதால் அவரது தந்தையான சுப்பிரமணியன் கடந்த 9ம் தேதி திருப்புவனம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். மானாமதுரை டி.எஸ்.பி.கார்த்திக்கேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ-க்கள் மாரிக்கண்ணன், பாலமுருகன் உள்ளிட்டோரைக் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வந்த வேளையில் திருப்புவனம் வைகையாற்றுப் பகுதியில் புதைத்து வைத்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார் அஜித்குமார்.
"அஜித்குமார் காணாவில்லை என்கின்ற புகார் வந்தவுடன் முதலில் சந்தேகப்பட்டது கொலையுண்ட முனியாண்டி குடும்பத்தார் மீது தீவிரமாக விசாரித்து வந்த வேளையில் அஜித்குமாரின் மொபைல் போனில் அடிக்கடி பேசிய மண்ட திவாகர் எங்களுடைய பார்வையில் பட்டார். அவரை அழைத்து தனிப்பட்ட முறையில் விசாரிக்கவே, " அஜித்குமாரை வைகையாற்றுப் பாலத்திற்கு வரவழைத்து முனியாண்டி உறவினர்கள் 7 நபர்களுடன் சேர்ந்து கொலை செய்து சிதைத்து ஆற்றிலேயே புதைத்ததாக ஒப்புக்கொண்டு புதைத்த இடத்தையும் காட்டவே டி.எஸ்.பி. மற்றும் தாசில்தார் முன்னிலையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் அஜித்குமாரின் பிணத்தை மீட்டோம். இது பழிக்கு பழி நடந்த கொலையே.!! மண்ட திவாகரை வைத்து மற்றவர்களை தேடி வருகின்றோம்." என்றார் தனிப்படை டீமிலுள்ள அதிகாரி ஒருவர். பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் கொலையுண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.