Skip to main content

அப்பவே நாங்க அப்டேட்...சுடுமண் காதணிகள், சிற்பங்கள், சங்கு வளையல்கள்...இன்றைய நவ நாகரீகத்துக்கு முன்னோடி கீழடியே...!!!!

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

உலகின் தொன்மையான, முதன்மை நாகரீகம் தமிழனின் நாகரீகமே எனப் பறைச்சாற்றி வருகின்றது. கீழடி அகழ்வாராய்ச்சியில் தொடர்ந்த 5ம் கட்ட ஆய்வில் சுடுமண் காதணிகள், சங்கு வளையல்கள், சுடுமண் சிற்பங்கள் மற்றும் சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி எனக் கண்டறியப்பட்டுள்ளது.
 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள கீழடியில் பண்டைய மக்களின் வரலாற்று அறிய தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆய்வுகள் நடைப்பெற்று வருகின்றன. அனைத்து ஆய்வுகளிலும் தமிழனின் நாகரீகமே முதன்மையானது எனத் தெரிய வர, ஆய்விற்கு சில தடைகளும் ஏற்படுத்தப்பட்டன. அதனால் அகழ்வாராய்ச்சியும் தடைப்பெற்றிருந்தன. தமிழர்களின் எழுச்சிமிகுப் போராட்டத்தால் தொடர்ந்து ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதற்காக கருப்பையா, முருகேசன், போதகுரு, மாரியம்மாள், நீதியம்மாள் ஆகியோரது ஏழு ஏக்கர் நிலங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. 
 

இதுவரை நடந்த நான்கு கட்ட அகழாய்வை விட 5ம் கட்ட அகழாய்வில் பெண்கள் அணியும் ஆபரணங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. அதுவும் அந்த ஆபரணங்கள் சுடுமண்ணால் செய்யப்பட்டு அவற்றையே அப்போதைய பெண்கள் அணிந்து இருந்தனர் என கூறப்படுகிறது. கிடைக்கப்பெற்ற வட்ட வடிவிலான சுடுமண் காதணியின் உட்புறமும் வெளிப்புறமும் பூக்கள் உருவம் வரையப்பட்டிருக்க, கூடுதலாக பெண்களின் சங்கு வளையல்கள் மற்றும் சுடுமண் சிற்பங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இதே வேளையில், முருகேசன் என்பவரது நிலத்தில் கூடுதலாக ஆறு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது.


இதில் சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். செங்கற்களால் கட்டப்பட்ட இந்த தொட்டியின் தரைப்பகுதியிலும் செங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 4 அடி உயரமும், 2 அடி அகாலமும், 5 அடி நீளமும் கொண்ட இந்த தொட்டியின் பயன்பாடு குறித்து எதுவும் தெரியவில்லை.
 

தொல்லியல் அதிகாரி ஒருவரோ, " சுடுமண் பொருட்கள் காலத்தால் அழியாதது, எளிதில் சேதமடையாது என்பதால் பண்டைய காலத்தில் சுடுமண் காதணிகள் புழக்கத்தில் இருந்திருக்கலாம். அது போக, இது கடலோர பகுதிக்கு அருகில் என்பதால் பெரிய அளவிலான சங்குகள் கிடைத்துள்ளன. அவற்றில் இருந்து வளையல்கள் உள்ளிட்டவைகள் செய்து பயன்படுத்தியுள்ளனர். இதுவரை நடந்த 4ம் கட்ட அகழாய்வில் கூட சுடுமண் அச்சுகள், ஒருசில ஆண், பெண் சிற்பங்கள் கண்டறியப்பட்டன. ஆனால் அவைகள் ஒழுங்கற்றவைகளாக இருந்தன. 
 

ஆனால் இப்போது கண்டறியப்பட்டுள்ள சிரித்த முகத்ததுடன் சிறிய அளவிலான சிற்பங்கள் மனித முகம், விலங்கு முகம் கொண்டும், தலையில் கொண்டை போன்ற அமைப்புடனும் கிடைத்துள்ளது. அது போல் இப்பொழுது கிடைக்கப்பெற்றுள்ள தண்ணீர் தொட்டியோ குடிப்பதற்கான பயன்பாட்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் தண்ணீர் வெளியேற வாய்ப்பில்லை. எனினும் அத்தொட்டியில் இரும்புக்கழிவுகள் இங்கு அதிகளவில் கிடைத்திருப்பதால் இரும்புத் தொழிற்சாலையில் இருந்து இரும்பை குளிர்விக்க இதனைப் பயன்படுத்தி இருக்கலாம் எனத் தெரிகின்றது என்றும், ஆய்வின் முடிவே இறுதியானது." என்கிறார் அவர்.




 

சார்ந்த செய்திகள்