சமீபத்தில் அரசு பள்ளி ஒன்றில் நாப்கின், ஸ்மார்ட் போர்டு மற்றும் கம்ப்யூட்டர்கள் திருடுப்போயின. காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கையில், கண்மாய்க்கரையில் கிடந்த அரசு முத்திரையிட்ட நாப்கின் பாக்கெட்டுகள் திருடனை அடையாளம் காட்ட, திருடப்பட்ட அனைத்துப் பொருட்களும் மீட்கப்பட்டன. ஆனால், திருட்டில் ஈடுப்பட்டவனை பிடிக்க தற்பொழுது வரை திணறி வருகின்றது காவல்துறை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள இலுப்பக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த நவம்பர் 6ம் தேதியன்று, பள்ளியின் பூட்டினை உடைத்து பள்ளியில் இருந்த 10 கம்ப்யூட்டர்கள், வகுப்பறைக்கென உள்ள ஸ்மார்மார்ட் போர்டு மற்றும் மாணவிகளுக்கான "நாப்கின்" அட்டைகள் உள்ளிட்டன களவு போனது.
உடனடியாக களமிறங்கிய காரைக்குடி துணைச்சரக போலீசார் பள்ளியின் தலைமையாசிரியரிடமிருந்து புகாரை வாங்கி வழக்கினை பதிவு செய்து திருடனையும், திருட்டுப் பொருட்களையும் தேடி வந்தது. இந்நிலையில், கண்மாய்க்கரை ஒன்றில் அரசு முத்திரையுடன் குவிக்கப்பட்ட நாப்கின் அட்டைகள் மாணாக்கர்கள் மூலம் வெளியாக, நாப்கின் அட்டைகளை கொட்டியவரை கண்டறிந்தது காவல்துறை.
அவரோ, "என்னுடைய வீட்டில் ராகவன் மகன் தங்கபாண்டியன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். கடந்த நான்கு மாதமாக வாடகை கொடுக்காததால் என்னிடமுள்ள மாற்று சாவியின் மூலம் வீட்டை திறந்து அவனுடைய பொருட்களுடன் இந்த நாப்கின் அட்டையையும் வெளியில் எறிந்தேன். அது இப்பொழுது வினையாகியுள்ளது." எனக் கூறியவர் அந்த வீட்டினையும் திறந்துவிட திருடப்பட்ட கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் போர்டுகள் மீட்டெடுக்கப்பட்டன. ஆனால் திருடன் மட்டும் பிடிபடவில்லை.
அதே வேளையில், திருடனின் பெயர் தங்கப்பாண்டியன் என்பது மட்டுமே தெரிந்த விஷயம்.! அது தவிர அவனைப் பற்றிய எந்த தகவலும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராத காவல்துறை அந்த வீட்டிற்கு அருகிலுள்ள சிசிடிவி பதிவுகளை பரிசோதனை செய்தததில் கடந்த 9ம் தேதி அவனுடைய வீட்டின் அருகிலேயே நின்றுக் கொண்டு நோட்டமிட்டது தெரியவந்துள்ளது. தூரத்தில் மங்கலான பதிவில் தெரியும் அவனது புகைப்படமும், வீடியோ பதிவுகளும் காவல்துறையை திணறடித்து வருவதால் திருடனை பிடிப்பதில் காவல்துறைக்கு சவால் ஏற்பட்டுள்ளது.