திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவருக்கு 104. இவரது உடன் பிறந்த தம்பி துரைசாமி. இவருக்கு 102 வயதாகிறது. இருவரும் பாசத்தோடு வளர்ந்துள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகளோடு வாழ்ந்து வந்தனர். வள்ளியம்மாளின் கணவர் சின்னக்கண்ணு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் 103 வயதில் இறந்துள்ளார். பின்னர் தனது இரண்டு மகன்கள், நான்கு மகள்களுடனும் வாழ்ந்து வந்தார்.
இதேபோல் துரைசாமிக்கு கண்ணம்மாள் (89) என்ற மனைவியும், நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் என மகன், பேரன், கொள்ளுப்பேரன் என நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். அக்கா, தம்பி இருவரும் ஒரே ஊரில் பக்கத்துப் பக்கத்து தெருவில் தத்தமது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நவம்பர் 20 ஆம் தேதி மாலை 5 மணியளவில் வள்ளியம்மாள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பக்கத்து தெருவில் இருந்த வள்ளியம்மாள் தம்பி துரைசாமி உட்பட உறவினர்களுக்கு தகவல் சொல்லியுள்ளனர்.
தனது அக்காவின் இறப்பு தகவல் அறிந்த அவரது தம்பி துரைசாமி தனது அக்கா உடல் அருகே சென்று அமர்ந்து கொண்டவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக கண்ணீரோடு அமர்ந்து இருந்துள்ளார். அடுத்த 7 மணி நேரத்தில் திடீரென துரைசாமியும் உயிரிழந்துள்ளார். இது அங்கிருந்த அனைவரின் துக்கத்தையும் அதிகரித்தது.
அக்கா, தம்பி இருவரும் 100 வயதை கடந்து நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர். அக்கா, தம்பி இருவரின் மரணத்தை கேள்விப்பட்டு பொதுமக்கள் திரளாக சென்று அவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் வைத்து இறுதிச் சடங்கு செய்து பின்னர் இருவரது சடலங்களையும் ஒன்றாக எடுத்துச் சென்று அருகே உள்ள மயானத்தில் இறுதி சடங்கு செய்தனர்.