Skip to main content

மூன்று மாதங்களுக்கு பிறகு கடலுக்கு செல்லும் மீனவர்கள்; பதற்றம் நீடிப்பதால் போலீஸார் குவிப்பு...

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

பதிவு பெறாமல் அதிவேக இன்ஜின்களை கொண்ட படகுகளுக்கு தடைவிதிக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பழையார் துறைமுகம் மீனவர்கள் நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர்.

 

sirkazhi fishermen issue

 

 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே இயற்கை சூழலுடன் அமைந்துள்ள துறைமுகம் பழையார் துறைமுகம். விசைப்படகுகள், பைபர் படகுகள், நாட்டுப்படகுகள், என நாள்தோறும் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க இத்துறைமுகத்தையே பயன்படுத்தி வந்தனர். இதில் 234 பெரிய, சிறிய விசைப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு மீீனவர்கள் பயன்படுத்துகின்றனர். இவற்றில் 47 விசைப்படகுகள் அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்டவை என்பதால் மீன்வளத் துறையில் பதிவு செய்யப்படவில்லை. மீதமுள்ள 187 விசைப்படகுகளில் பதிவுக்கு பிறகு 36 படகுகள் 240 குதிரை திறனுக்கு அதிகமான எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது என மீன்வளத்துறையினரால் கண்டறியப்பட்டு 151  விசைபடகுகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டதாக மீன்வளத் துறையில் தெரிவித்தனர்.

இதற்கிடையில் பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதற்கோ, துறைமுகத்தில் நிறுத்தி வைக்கவோ மீன்வளத் துறையில் அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் தடையை மீறி படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் தடை செய்யப்பட்ட படகின் உரிமையாளர்கள் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த 240 குதிரை திறனுக்கு குறைவான விசைப்படகளை கொண்ட மீனவர்கள் தங்களின் மீன்பிடி தொழில் பாதிப்படைவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துவந்தனர், இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து அதிக திறனுள்ள என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை தடை செய்யக்கோரி பதிவு செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். மயிலாடுதுறை கோட்டாட்சியர் தலைமையில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மீன்வளத் துறையினர் இரு தரப்புகளிடையே பலமுறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து பதிவு செய்யப்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து வேலைநிறுத்தத்தை தொடங்கி நடத்தி வந்தனர்.

கடந்த அக்டோபரில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அரசு பதிவு செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்தனர். அதனை தொடர்ந்து அதிவேக சீன எஞ்சின் விசைப்படகு சங்கத்தினரும் வழக்கு தொடுத்தனர். சென்னை உயர்நீதிமன்றம் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்கு சட்டத்தின்படி அரசு அங்கீகாரம் பெறாத விசைப்படகுகள் கடலுக்கு செல்லக் கூடாது என கூறியது. இதனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பதிவு செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல ஆயத்தமாகினர். அதன்படி மீன்வளத்துறை 130 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல மீண்டும் பதிவு செய்துகொண்டனர். விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதே நேரத்தில் தடைசெய்யப்பட்ட அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகு ஓன்றும் கடலுக்குள் சென்றதால் மீண்டும் பதற்றமானது.

இதுகுறித்து தகவல் அறிந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேல் போலீசாருடன் மற்றொரு படகில் துரத்தி சென்று தடை செய்யப்பட்ட படகை பிடித்துவந்து 37 மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மீண்டும் பிரச்சனை வரும் என்பதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்