சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியில் மீன்கள் செத்து மிதப்பது மீன் விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் பிடிக்கப்படும் மீன்கள் பல்வேறு இடங்களில் விற்கப்பட்டு வருகிறது. அதுவும் அந்தப் பகுதியில் 'மேட்டூர் மீன்' என்பது பிரசித்திப் பெற்ற ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் இறந்தும், மயங்கிய நிலையிலும் மீன்கள் கரை ஒதுங்குவது அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது கோடை வெயிலின் தாக்கமா அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் உயிரிழக்கின்றனவா அல்லது வேதிப் பொருட்கள் கலந்து அதன் மூலம் ஏற்பட்ட விளைவு காரணமாக மீன்கள் உயிரிழக்கின்றனவா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.