Skip to main content

“கையெழுத்தாகி ஒன்றும் ஆகப் போவதில்லை” - தமிழிசை சவுந்தரராஜன் பதில்

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

"Signing will not lead to anything" - Tamilisai Soundarrajan's response to the signature petition for recalling the Governor

 

தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. பொது மேடைகளில் தமிழக ஆளுநர் பேசும் அரசியல் மற்றும் ஏனைய பொதுக்கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. 

 

ஜி.யு.போப் திருக்குறளை சரியாக மொழிபெயர்க்கவில்லை என்றும் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாகவும் ஆளுநர் தொடர்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். இக்கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் சர்ச்சைக்குள்ளாகி இதற்கு எதிர்ப்புகளும் கண்டங்களும் வலுத்து வருகிறது.

 

மேலும், "தமிழக ஆளுநர் ரவி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசுவதாக இருந்தால் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி விட்டு பின்னர் கருத்து தெரிவிக்க வேண்டும். சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் என எதைப் பற்றி பேசினாலும் ஆளுநர் கூறும் கருத்துக்கள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கிறது. பாஜக தலைமையை மகிழ்விக்க இப்படி பேசுவதாக இருந்தால் ஆளுநர் ரவி பதவி விலகி விட்டு இதுபோன்ற கருத்துக்களைச் சொல்லட்டும்" என திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கூட்டாக கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

 

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழு தலைவரும், பொருளாளருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் ரவியைத் திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க இருக்கிறோம். அதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சியின் எம்.பிக்கள் நாளைக்குள் அறிவாலயம் வந்து ஆளுநர் தொடர்பான மனுவைப் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட வேண்டும்" என அழைப்பு விடுத்திருந்தார்.

 

இதைத்தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அவசரப் பயணமாக டெல்லி சென்றார். நேற்று காலை 10.50க்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட தமிழக ஆளுநர் இன்று இரவு 8.30 மணியளவில் மீண்டும் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணங்களுக்கானப் பயணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இதனிடையே, ஆளுநரைத் திரும்பப்பெறும் கையெழுத்து மனு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “ஆளுநர் அவரது கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை உள்ளது. அவரது கருத்து பிடிக்கவில்லை என்றால் எதிர்க்கருத்து சொல்லலாம். ஆனால் கருத்துச் சொன்னார் என்பதற்காகவே ஆளுநரைத் திரும்பப் பெறக் கோருவது ஏற்க முடியாது. எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. முதல் குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. சாதாரணக் குடிமகனுக்கும் இருக்கிறது. அவர் கருத்தை அவர் சொல்லுகிறார். அவர் கருத்துச் சொன்னால், இது எங்கள் கருத்து இல்லை எனச் சொல்லுங்கள். ஒரு கருத்துச் சொன்னார் என்பதற்காகவே ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் எனச் சொல்வது சரியல்ல. கையெழுத்தாகி ஒன்றும் ஆகப்போவது இல்லை. நாமும் ஒன்று நடத்துவோம் என நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் தேவை இல்லாதது” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்