புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அடிக்கடி சிலர் கஞ்சா போன்ற மாற்றுப் போதையில் அரிவாளைத் தூக்கிக்கொண்டு கடைவீதியில் சுற்றுவதும், கடைகளை உடைப்பதும், கடையில் உள்ளவர்களை தாக்குவதும் வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியாமல் தடுமாறும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் திக் திக் மனநிலையிலேயே கடைவீதிக்கு வந்து செல்கின்றனர்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் அரிவாளோடு வந்து பல கடைகளையும், ஏடிஎம் கதவுகளையும் அடித்து உடைத்துச் சென்றுள்ளனர். அவர்களை ஆலங்குடி போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்த கடைகள் முதல் பலரும் ரவுடிகளுக்கு பயந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவு இல்லை என்று சொல்லி விட்டனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இதுபோன்ற செயல்களை தடுக்க அப்போதைய ஆலங்குடி காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் (தற்போது டி.எஸ்.பி), போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வீரமணி (தற்போது திருச்சி ராம்ஜி நகர் ஆய்வாளர்) ஆகியோர் ஆலங்குடி பேருந்து நிலையம், அரசமரம், வடகாடு முக்கம், பேரூராட்சி முக்கம், பாத்தம்பட்டி முக்கம், சந்தைப்பேட்டை என பல இடங்களிலும் 15 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த காவல்நிலையத்தில் தனியறையில் பெரிய டிவியில் ஓடவிட்டு கண்காணித்து வந்தனர். இதனால் அந்த சில ஆண்டுகள் இதுபோன்ற அரிவாள் கலாச்சாரம் ஓய்ந்திருந்தது. வணிகர்களும், பொதுமக்களும் நிம்மதியடைந்திருந்தனர். அதேபோல் போக்குவரத்தை சரி செய்ய சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்த கயிறு அடித்தும் பல இடங்களில் கார்டுலெஸ் ஸ்பீக்கர்கள் வைத்தும் போக்குவரத்து சரி செய்யப்பட்டதால் போக்குவரத்தும் சீராக இருந்தது விபத்துகளும் தடுக்கப்பட்டது.
ஆனால் அந்த சில ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பல பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் உள்ளது. அதேநேரத்தில் முன்பு அமைக்கப்பட்ட அத்தனை கேமராக்களும் நகரில் நடக்கும் அட்டூழியங்களைப் பார்த்து தலைகுனிந்து கிடக்கிறது. நகர மக்களையும், வணிகர்களையும் காக்க பேரூராட்சி நிர்வாகமோ, காவல் நிர்வாகமோ அந்தக் கேமராக்களை சரி செய்ய நினைக்கவில்லை. இந்த கேமராக்கள் சரி செய்து இயங்கத் தொடங்கினாலே பல குற்றச்செயல்களை தடுக்க முடியும் வணிகர்களும், பொதுமக்களும் அச்சமின்றி இருப்பார்கள். மேலும் இந்த கேமராக்கள் சரி செய்யப்படால் வெளியூர்களில் இருந்து தப்பிவரும் குற்றவாளிகளைக் எளிமையாக அடையாளம் காண ஏதுவாக இருக்கும் என்கின்றனர் மக்கள்.