தமிழநாட்டில் கரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதில் மிக முக்கியமானது முழு ஊரடங்கு. இந்த முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்திவருவது, தமிழ்நாட்டின் உள்ளேயே கள்ளச்சாராயம் தயாரிப்பது போன்று சட்டத்துக்குப் புறமான செயல்கள் நடந்துவருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு காவல் சரகம் மற்றும் கறம்பக்குடி காவல் சரகத்தில் உள்ள கருக்காக்குறிச்சி உள்ளிட்ட சில கிராமங்களில் மட்டும் கடந்த 15 நாட்களில் சுமார் 15 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களைப் போலீசார் அழித்துள்ளனர். அதையும் மீறி கள்ளச்சாராயம் காய்ச்சி பல கிராமங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவருகின்றனர். இதேபோல மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவில் தனிப்படை போலீசார் அழித்துள்ளனர்.
இந்த நிலையில், சாராயம் காய்ச்சக்கூடாது என்று போலீசார் கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்திவருகின்றனர். மற்றொரு பக்கம் சாராயம் காய்ச்சுவதும் தொடர்கிறது. இன்று (03.06.2021) காலை புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம் எல்.என்.புரம் ஊராட்சியில் உள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் ஒரு கடையின் பின்பக்கம் கேனில் இருந்து சாராயம் தண்ணீர் கலந்து பாட்டில்களில் அடைக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் திடீரென அங்கு சோதனை செய்தனர். அப்போது, அங்கே அணவயல் கிராமத்தைச் சேர்ந்த காயாம்பூ மகன் கணேசன் (42) என்பவர் சாராயத்தில் சாக்கடை தண்ணீர் கலந்து பாட்டில்களில் அடைத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 13 லிட்டர் மற்றும் சாக்கடைத் தண்ணீர் கலந்து அடைக்கப்பட்ட 20 சாராயப் பாட்டில்களையும் சாராயப் பாக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் அங்கிருந்து தப்பிச் சென்ற சின்னத்துரை மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர் அதே ஊரைச் சேர்ந்த அதிமுக ஊ.ம.தலைவரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.