திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த எக்லாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்கமல். இவர் வாணியம்பாடி சி.என்.ஏ சாலை எல்.ஐ.சி அலுவலகம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் ஜே.சி.பி உதிரிபாகங்கள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினந்தோறும் வீட்டில் இருந்து கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வணிகவளாகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடை திறப்பார். மீண்டும் இரவு கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வணிக வளாகத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தி விட்டு கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்ல இருசக்கர வாகனம் எடுக்க வந்த போது இருசக்கர வாகனம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து. உடனடியாக அங்குள்ள சிசி டிவி பதிவு காட்சிகளை பார்த்த போது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வதற்கான காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது
இதனைத் தொடர்ந்து பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு ராஜ்கமல் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் செல்வது வழக்கமாக உள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் மனுக்கள் கொடுத்தாலும் காவல் துறையினர் இருசக்கர வாகன திருடர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இதேபோல் சில தினங்களுக்கு முன்பு, வாணியம்பாடி அடுத்த அம்பூர்பேட்டை , டீச்சர்ஸ் காலணி பகுதிகளில் சாலைகளில் சுற்றி திரியும் ஆடுகளை மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து நோட்டமிட்டு ஆடுகளை திருடி செல்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தெருக்களில் சுற்றி கொண்டிருந்த ஆடுகளை வாகனத்தில் தூக்கிக்கொண்டு சென்றதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுவரை 6 ஆடுகளை இருசக்கர வாகனத்தில் திருடி சென்றுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற பொழுது, “இதெல்லாம் ஒரு புகாரா? நாங்க விசாரிக்கலாமா? நீயே தேடி கண்டுபிடிச்சுக்கோ போ.. ஆட்ட யாரு ஒன்னா அவுத்து விடச் சொன்னது” என திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு இருசக்கர வாகன திருடர்கள், ஆடு திருடர்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.