அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் உள்ளதால், அவரை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கியது. அதே சமயம் அமைச்சர் நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. அமலாக்கத்துறையினர் தங்கள் மருத்துவக் குழுவினரை கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதி வழங்கியது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிற்கும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தூஷார் மேத்தாவுக்கும் இடையே சுமார் 2 மணி நேரமாக காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து பதில் வாதத்திற்கு அவகாசம் அளிக்க அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் 27 ஆம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த ஆட்கொணர்வு மனு நிலைக்கத்தக்கதா அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற விவாதம் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால், அமலாக்கத்துறை நிலைக்கத்தக்கது அல்ல என்றும், விசாரணைக்கே எடுத்துக்கொள்ள கூடாது என்ற வாதத்தை நேற்று உச்சநீதிமன்றத்தில் முன்வைத்தது. அப்போது உச்சநீதிமன்றம் இடு குறித்து உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று கூறியதால் ஆட்கொணர்வு மனு நிலைக்கத்தக்கதா என்ற வாதத்தை முன்வைத்தோம். இதுவரை உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளில் ஏதாவது நீதிமன்றத்தால் ஒருவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தால் அந்த உத்தரவு சட்ட விரோதமாகவோ அல்லது இயந்திரத்தனமாகவோ வழங்கப்பட்டு இருந்தால் ஆட்கொணர்வு மனு நிலைக்கத்தக்கது என்ற தீர்ப்பை முன்வைத்தோம்.
இரண்டாவதாக மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் செந்தில் பாலாஜியை போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது இந்த நாட்களையும் நீதிமன்றக் காவலில் உள்ள நாட்களாக கருதி கழித்துக்கொள்ள வேண்டுமா, இல்லையா என்ற வாதம் வந்தது. அதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை காட்டி எந்த சூழ்நிலைகளிலும் 15 நாட்களை மீறி போலிஸ் காவல் தர முடியாது என்ற வாதத்தை முன்வைத்தோம். அதற்கும் மேலாக இந்திய சுங்க சட்டம், வருமான வரி சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் ஆகிய வழக்குகளை விசாரிக்கக் கூடிய அதிகாரிகளுக்கு போலிஸ் அதிகாரி என்ற அதிகாரத்தை கொடுத்துள்ளது.
ஆனால் பாராளுமன்றம் பண மோசடி தடுப்பு சட்டத்தை உருவாக்கும்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் போலிஸ் அதிகாரிகள் என்று வரையறை செய்யவில்லை. அந்த காரணத்தின் அடிப்படையில் இந்தியாவில் அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகளுக்கு புலன் விசாரணை செய்யும் போது போலிஸ் காவலில் எடுக்க அதிகாரமே இல்லை என்ற வாதத்தை எடுத்து வைத்திருக்கிறோம். இந்த அனைத்து வாதங்களுக்கும் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் தூஷார் மேத்தா வரும் செவ்வாய்க்கிழமை பதிலளிப்பார். அதன் பிறகு தீர்ப்புக்கு ஒத்தி வைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.