கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து, சமுதாய சமையல் அறைகள் அமைத்து இதர பகுதிகளில் இருந்து வரப்பெறும் உணவுப் பொட்டலங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள 8 பொறியியல் கல்லூரிகளில் மழை பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றது என அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். அதே சமயம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் இருக்க பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள் மற்றும் கூடுதலாக 2 இணைச் சீருடைகள் ஆகியவை அருகிலுள்ள பிற மாவட்டங்களிலிருந்து பெற்று வழங்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மழை வெள்ள பாதிப்புக்கான நிவாரண பொருட்களைச் சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் பாண்டியாபுரம், புதுக்கோட்டை, சாலைப்புதூர் சுங்கச்சாவடிகளில் இன்று (24.12.2023) முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என அறிவித்து வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.