Skip to main content

சுய வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் யோசனை..! 

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

Self-employment should be created and given .. High Court idea for Central Governments ..!

 

போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஏமாற்றமடைவதைத் தடுக்க, இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

 

தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணிக்கு நேர்முக தேர்வில் கலந்துகொள்ளும்படி 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிருபாகரன் மற்றும் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் குற்றப்பிரிவு நடத்திய விசாரணையில், பாரதிராஜா என்ற பொறியியல் பட்டதாரி தன்னிடம் பணம் பறிக்க முயற்சித்த போலி நிறுவனத்திற்கு நீதிபதியின் முகவரி மற்றும் மொபைல் எண்ணையும் அளித்துள்ளார் என்பது தெரியவந்தது.

 

மேலும், 80 பேரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 9 லட்சத்து 28 ஆயிரத்து 850 ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும், இது சம்பந்தமாக சித்ரா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய பிராதப் மற்றும் ராஜ் தலைமறைவாக உள்ளதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யமுடியவில்லை என்றும் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து சித்ரா மீதான வழக்கைத் தனியாகப் பிரித்து 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கரோனா ஊரடங்கு பாதிப்பை சாதகமாகப் பயன்படுத்தி சமீபகாலமாக, போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இளைஞர்களை மோசடி செய்துள்ளதாகவும், ஏமாற்றமடைந்த இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வேலை வாங்கித் தருவதாக கூறி நடைபெறும் மோசடி மற்றும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்து, இந்த வழக்கை முடித்துவைத்தனர்.

 

மேலும், இந்த மோசடி குறித்த விசாரணையில் சிபிசிஐடி போலீசார் சுணக்கம் காட்டுவதாக தெரிந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தி விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளிவைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்