மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் நோயாளிகளை காக்க வைத்து விட்டு செவிலியர்கள் சேரி செலக்சன் செய்து கொண்டிருந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் நோயாளிகளை கவனிக்காமல் சேலை செலக்சன் செய்வதற்காக சென்றதாக அங்கு வந்த நோயாளிகள் பரபரப்பாக குற்றம்சாட்டி இருந்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்திருந்தது.
இந்தநிலையில் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. மருத்துவ உதவிக்காக வந்த சிலர் எடுத்துள்ள அந்த வீடியோ காட்சியில் செவிலியர்கள் அறையில் சேலை வியாபாரம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அங்கு சேலைகளை தேர்வு செய்ய செவிலியர் அமர்ந்திருந்தார். 'யாம்மா அரை மணி, ஒரு மணி நேரமா நோயாளிங்க காத்திருக்காங்க. இத வியாபாரம் பண்ணதான் நீங்க சம்பளம் வாங்குறீங்களா? ஒரு மணிநேரமா பேஷண்ட வச்சுக்கிட்டு இப்படியா பண்ணுவீங்க' என ஆதங்கத்துடன் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர். வீடியோ எடுப்பதை சுதாரித்த செவிலியர் கீழே கிடந்த சேலைகளை எடுத்து பைகளில் போட்டுக்கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.