டெல்லி போராட்டத்தில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், சிஏஏ ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் உள்ள மஜுபூர், ஜாப்ராபாத், குரேஜ்காஸ், சாந்த்பாக், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 38 பேர் பலியாகினர். அப்போது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பாஜகவின் கபில் மிஸ்ரா உட்பட மூன்று பாஜக முக்கிய தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் உத்திரவிட்டார். பின்னர் இரவே நீதிபதி முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இவ்வாறு பணிமாற்றம் செய்யப்பட்டது இந்தியாவின் உச்சபட்ச ஜனநாயக அமைப்பான நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் ஜனநாயகத் துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஹே. தஹில் ரமானி அரசியல் இடையூறு காரணமாகப் பதவி விலகுவதும், மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்து போவதும், தற்போது உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் ஒரே இரவில் இடமாற்றம் செய்யப்படுவதுமான செயல்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் ஜனநாயகத் துரோகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.