
கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் அரசியல் கட்சி பிரபலங்களும் இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது இது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், “அதிகாரத்தில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவரவர்கள் வசதிக்குத்தான் அதை கையாளுவார்கள். முன்னாடி அதிமுக இருந்தபொழுது கலைஞரை எப்படி கைது செய்தார்கள் என்பது தெரியும். சிதம்பரம் வீடேறி கைது செய்யப்பட்டது என்பதை எல்லாம் நாம் பார்க்கிறோம். இவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது என்ன செய்கிறார்களோ அதையேதான் அவர்கள் அதிகாரத்திற்கு வரும்பொழுது செய்கிறார்கள். கைது என்றவுடன் நெஞ்சு வலி வருவதெல்லாம் நிறைய தெலுங்கு படத்தில் பார்த்திருக்கிறோம். கைதுக்கு நெஞ்சு வலி என்றால் ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சு வலிதான் வர வேண்டும். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் இதுபோன்ற அதிக வேலைகளை பாஜக செய்வார்கள். இதை இங்கு கொண்டுவந்துதான் நிறுத்துவார்கள் என்பது தெரிந்ததுதான்'' என்றார்.

'இது பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக சொல்கிறதே' என்ற கேள்விக்கு, ''அது எனக்கு தெரியவில்லை. எதற்காக பழி வாங்க வேண்டும். இந்த காரணத்திற்காகத்தான் பழி வாங்குகிறோம் என்று சொல்ல வேண்டும். அதிமுக காலத்தில் அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது என்றால் இவ்வளவு காலம் ஏன் வருமானவரிச் சோதனையாளர்கள், அமலாக்கத்துறை எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தது. உரிய நேரத்தில், இந்த தகவல் தெரிந்த உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா. அதிமுக ஆட்சி முடிந்து இன்னைக்கு எவ்வளவு நாளாச்சு. அதுவும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இவர் அமைச்சராக இல்லை. அதற்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தார். அது முடிந்து எவ்வளவு காலம் ஆச்சு. இப்பொழுது வந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்றால்... அதிமுக ஆட்சியில் நடந்த தவறுக்கு விசாரணை என்றால் அது நேர்மையாக இருக்கிறதா?
உங்களுக்கு இப்பொழுது உடம்பு முடியவில்லை உடனே மருத்துவமனையில் சேர்ப்பீர்களா அல்லது ஒரு வருஷம் கழித்து சேர்ப்பீர்களா. நடவடிக்கை என்பது எப்பொழுது எடுத்திருக்க வேண்டும். 15 வருடத்திற்கு முன்னாடி ஒருத்தன் கொலை பண்ணிட்டாங்க இப்போது அவரை கைது செய்கிறோம் என்று சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள். இது ஒரு விதமான வேடிக்கைதான். அவர் செய்தது, இந்த கைது எல்லாம் போய்விடும் இன்னும் இரண்டு நாட்களுக்கு நெஞ்சுவலி பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். காந்தியை ஒன்றும் கைது செய்யவில்லை. இசிஜி இயல்பாக இல்லை என்று சொல்கிறார்கள். உண்மையில் சொல்லப் போனால் செந்தில் பாலாஜியால் தான் நாட்டு மக்கள் இரண்டு வருடமாக இயல்பு நிலையில் இல்லை. இதுதான் எதார்த்தம்'' என்றார்.