கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இன்று 29 ம் தேதி நாகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
நாகை அவுரி திடலில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், நடிகர் மன்சூரலிகான் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ஒவ்வொருவரும் கண்டன முழக்கங்களை எழுப்பி பேசினர்.
செய்தியாளர்களை சந்தித்த சீமான், "தமிழக மக்களின் வரியை பெற்றுக்கொள்ளும் மத்திய அரசு, கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்த நிற்கும் மக்களின் நலன் காக்க தவறி விட்டது. பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்க வராமல் தேர்தல் பிரச்சார வாக்கு வங்கிக்காக தமிழகம் வருவது இங்குள்ள மக்களை அவமதிப்பதாகவே உள்ளது.
தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டமாட்டோம். கருப்பு கொடிக்கென்று பெருமை உள்ளது. அதை பிரதமருக்கு எதிராக பயன்படுத்தி சிறுமைப்படுத்த விரும்பவில்லை. அதற்கு பதிலாக பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்காமல் செய்வது தான் நாம் தமிழர் கட்சியின் நோக்கம்" என்றார்.
தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறுகையில், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கவில்லை என்றால், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும்" என்றார்.