மண் வளத்தையும் நீர்வளத்தையும் பாதுகாக்க சீமைக்கருவேல மரங்களையும், தைல மரங்களையும் அழிக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டத்தில் புறப்பட்டுள்ள இளைஞர்கள் அழிப்பு முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக இப்படி பல ஆயிரம் சீமைக்கருவேல மரங்களை அழித்ததால் தான் இந்த வருடம் பருவமழை கூட ஏமாற்றாமல் பெய்து வருகிறது. அதனால் பல நீர்நிலைகள் தண்ணீரோடு காட்சியளிப்பதாக கூறும் இளைஞர்கள் மேலும் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் தைல மரங்களையும் அழித்துவிட்டால் வறட்சி மாவட்டம் என்பதை மாற்றிவிடலாம் என்றும் சொல்கிறார்கள்.
அதனால் தான் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தைல மரங்களுக்கு எதிராக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை நடத்திய விவசாயிகள் நீதிமன்றம் சென்று வனத்துறைக்கு சொந்தமான நிலங்களில் தைல மரக்கன்றுகளை நட தடையும் பெற்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் கூடிய இளைஞர்கள் சீமைக்கருவேல மரக்கன்றுகளை பிடிங்கி கொண்டு வந்தால் பரிசு என்று அறிவித்தார்கள். அறிவிப்பு வெளியான நாளிலேயே பல இளைஞர்கள் கருவேலங்கன்றுகளுடன் வந்து பரிசுத் தொகையை வாங்கிச் சென்றனர். இப்படி ஒரு பரிசுத் திட்டம் தொடங்கியுள்ள செய்தியை நக்கீரன் இணையத்தில் முதலில் வெளியிட்டோம்.
அடுத்தடுத்த நாட்களில் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஊர் முழுவதும் சென்று கருவேல மரக்கன்றுகளை பிடிங்கிக் கொண்டு வந்து பரிசு தொகையை பெற்றுச் செல்கின்றனர். இந்த பரிசு திட்டத்தில் 3 நாட்களில் சுமார் 5 ஆயிரம் சீமைக் கருவேலங்கன்றுகளை வாங்கி அழித்துள்ளனர் இளைஞர்கள். இன்னும் சில வாரங்களில் சீமைக்கருவேங்கன்றுகளை இல்லாத கிராமம் கொத்தமங்கலம் என்பதை மாற்றி காட்ட உள்ளனர்.