"சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள காட்டு நாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த சமுதாய மாணவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்" என மன்னார்குடியில் நடந்த காட்டுநாயக்கர் சமுதாயக் கூட்டத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.
"தமிழகத்தில் முப்பத்தி ஆறு பழங்குடிச் சமூகத்தவர்கள் உள்ளனர். இவர்களில் தோடர், கோத்தர், குறும்பர், பனியர், இருளர், காட்டுநாயக்கர் ஆகிய ஆறு சமூகத்தவர்களும் தொன்மைப் பழங்குடி குழுக்கள் என அரசு வரையறை செய்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான காட்டு நாயக்கர் சமூகத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் அந்தச் சமூகத்து மக்கள் பன்றிகள் மேய்ப்பதும், குறி சொல்லுவதும், பாசி மணிகளை விற்றும் தங்களின் காலத்தைக் கழிக்கின்றனர். கூலி வேலைக்குச் செல்ல நினைத்தாலும், சாதியைக் காரணம் காட்டி இதர சமுதாய மக்கள் வேலை கொடுப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் அந்த வேலை குதிரை கொம்பான காரியமாக மாறிவிடும்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துவரும் அந்த மக்களுக்குக் கல்வி என்பது எட்டாக்கணியாகவே இருக்கிறது. கடைநிலையில் வாழும் காட்டு நாயக்கர் சமூகத்தினர், பத்தாம் வகுப்பை தாண்டியவர்களை தமிழக அளவில் விரல்விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட துயரமான அவல நிலையே இன்று வரை நீடித்து வருகிறது. இதற்கு சாதிச் சான்றிதழே தடைக்கல்லாக இருக்கிறது. எங்களையும் மனிதர்களாக பாவிக்க அரசும், இந்தச் சமுகமும் முன்வரவேண்டும்," என்கிறார்கள் அந்தச் சமுதாயத் தலைவர்கள்.
அரசாணைப்படி பழங்குடியின எஸ்.டி.பட்டியலிலுள்ள காட்டு நாயக்கர் சமூகத்தினர், தாங்களும் உயரவேண்டும், தங்களது குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கவும் வேலைவாய்ப்பினைப் பெறவும் சாதிச் சான்று ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. அதனை அரசு தடையின்றி வழங்கிட வேண்டும் என்பதே அந்தச் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.
அந்தக் கோரிக்கையை முன்வைத்தே, "தமிழ்நாடு காட்டு நாயக்கன் சீர்திருத்தச் சங்கத்தின் பேரவை கூட்டம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைப்பெற்றது. அந்தக் கூட்டத்திற்கு, "முப்பத்திஆறு உட்பிரிவுகளை உள்ளடக்கிய சமூகத்தில், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள, காட்டு நாயக்கர் சமூக மாணவர்களுக்கு எஸ்.டி பிரிவில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும், 1 சதவீத இட ஒதுக்கீடை உயர்த்தி, கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். அரசின் நலத் திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பெற சாதிச் சான்றிதழ் அவசியம் என்பதால், அந்தச் சான்றிதழைப் பெற விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நகரத்திலும் அரசு சார்பில் சமுதாயக் கூடம் கட்டித் தரவேண்டும், மன்னார்குடி அருகே உள்ள மூவாநல்லூர், இரட்டைக் குளம் சுடுகாடுகளில் காட்டு நாயக்கர் சமூகத்திற்கு என எரியூட்டும் கட்டிடம் கட்டித் தர வேண்டும். நல வாரியத்தின் மூலம் பார பட்சமின்றி நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்களை அரசுக்கு முன்வைத்தனர்.