திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதிக்கு அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்குட்பட்ட நாட்றம்பள்ளி, வெலக்கல்நத்தம் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், வாகன ஓட்டிகளின் கவனக் குறைபாடு காரணமாகவும் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 5 விபத்துகள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
அதே வேளையில், சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் இருக்கும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குத்தான் செல்வார்கள். அதனால் இந்த அரசு மருத்துவமனையில் ஏகப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியான வீடியோ காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் ''அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளைப் பராமரிப்பதற்காக, எந்த ஒரு மருத்துவரும், செவிலியரும் பணியில்லை. ஆனால், அதற்கு மாறாக மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் செக்யூரிட்டி ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போனார்கள்.
அந்த சமயத்தில் மருத்துவர்கள் பணியில் இல்லாத காரணத்தால் பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். அந்த செக்யூரிட்டி மருத்துவரின் அறிவுரையின் பேரில் சிகிச்சை அளித்தாரா அல்லது மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சை அளித்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் இத்தகைய செயல்பாடுகள் அரசு மருத்துவமனைக்கு வரும் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது. இந்த சம்பவத்தை அரசு மருத்துவமனையில் இருந்த நபர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.