வாடகையை நம்பித் தான் நகராட்சி ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்கப்படுகின்ற சூழலில்., இரண்டு வருடங்களாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாததால், காரைக்குடியிலுள்ள நகராட்சிக் கடைகளை பூட்டி சீல் வைத்தனர் நகராட்சி அதிகாரிகள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் அண்ணா மார்க்கெட், செக்காலை ரோடு, சுப்பிரமணியபுரம் மற்றும் புதிய பேருந்து நிலையம் உட்பட பல இடங்களில் நகராட்சிக்கு சொந்தமாக கடைகள் உள்ளன. இதனின் வாடகையை வைத்தும், நகராட்சியின் வரிகளையும் கொண்டும் ஊழியர்களுக்கு சம்பளம் போடுவது அனைத்து நகராட்சிகளில் இருக்கும் நடைமுறைகளில் ஒன்று. இதில் சிலர் கடந்த இரண்டு வருடங்களாக வாடகை செலுத்தாமல் இருந்ததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
வாடகை செலுத்த வேண்டும் என பலமுறை நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் கொடுத்து அறிவுறுத்தியும் பலரும் கண்டும் காணாமல் மெத்தனமாக இருந்துவிட, இன்று நகரமைப்பு அலுவலர் பெரியசாமி, மேலாளர் ஷியாமளா, நகராட்சி வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், மாரிமுத்து மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஒன்றிணைந்து வாடகை செலுத்தாமல் இருக்கும் கடைகளைப் பூட்டி சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்ட 9 கடைகளில் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் தகவல் மையமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.