
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் முடிந்து மனுதாக்கல், தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில், பள்ளி வளாகங்களைத் திறந்துவைக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி நடக்க இருப்பதால், பள்ளிகளை திறந்து வைக்க அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆய்வு, கேமரா பொருத்தம், தேர்தல் ஒத்திகை ஆகியவை நடக்க உள்ளதால், தலைமை தேர்தல் அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பள்ளிகள் திறந்திருப்பதை உறுதி செய்யுமாறு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆய்வு நடக்கிறது. வாக்குப்பதிவு நடக்கும் 88,936 வாக்குச்சாவடிகளில் 45 ஆயிரம் வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.