Skip to main content

பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை இறந்தது; போலீசார் தேடிய வாலிபர் கைது

Published on 18/09/2024 | Edited on 18/09/2024
A schoolgirl gives birth; The youth wanted by the police was arrested

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அருகாமை கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15 ந் தேதி மாலை வீட்டில் இருந்த மாணவிக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டதால் அவரது தாயார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

மருத்துவமனை செல்லும் வழியிலேயே மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குறைபிரசவமாக பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஆம்புலன்சிலேயே முதலுதவி சிகிச்சை அளித்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை பெற்ற மாணவி மற்றும் மாணவிக்கு பிறந்து ஆபத்தான நிலையில் இருந்த குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 15 ந் தேதி பிறந்த குழந்தை 17 ந் தேதி இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில், மாணவி அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் எங்கள் ஊரைச் சேர்ந்த திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையான  சிலம்பரசன் என்பவர் சுயஉதவிக்குழு வசூலுக்கு தன் வீட்டிற்கு வரும்போது அம்மா இல்லாத நேரத்தில் என்னை மிரட்டி இணங்க வைத்துவிட்டார். இந்த குழந்தைக்கு அவரே காரணம் என்று கூறியுள்ளார். மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலிசார் வழக்கு பதிவு செய்து இந்த மோசமான சம்பவத்திற்கு காரணமான சிலம்பரசனை தேடி வந்த நிலையில் இன்று புதன் கிழமை அறந்தாங்கி போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் மாணவிக்கு பிறந்து இறந்த குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குழந்தையின் உடல் அறந்தாங்கி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவி கர்ப்பமாகி குழந்தை பிறந்தது அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறுமி கர்ப்பமாக இருந்தது பெற்றோருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் எப்படி தெரியாமல் இருந்தது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்கின்றனர் பெற்றோர்கள்.

சார்ந்த செய்திகள்