
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரசுப் பேருந்தில் ஏற முயன்ற மாணவன் தவறி கீழே விழுந்த நிலையில், பேருந்தின் பின் சக்கரம் கால்களில் ஏறிய சம்பவம் தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உளுந்தூர்பேட்டையிலிருந்து சேந்தநாடு கிராமத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்து வந்த நிலையில், உளுந்தூர்பேட்டை கடைவீதி அருகே பேருந்து சென்றது. அப்பொழுது உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த ஆகாஷ் என்ற மாணவன், பேருந்து சென்றுகொண்டிருக்கும் போதே ஏற முயன்றார். அப்பொழுது திடீரென தவறி விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரம் மாணவனின் காலில் ஏறியது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மாணவனைச் சேர்த்தனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.