மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை தந்த புகாரில், சென்னை கே.கே.நகரில் செயல்பட்டுவரும் பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளியின் முதல்வர், பள்ளியின் நிர்வாகி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதேபோல், முன்னாள் மாணவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
அந்த சம்மனில், ஆசிரியர், பள்ளி நிர்வாகி உட்பட ஐந்து பேரும் ஜூன் 4ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு நேரில் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபாலன் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இதுவரை 25 புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 25 புகார்களில் 15 புகார்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவிகள் அளித்துள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.