பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று போலீசார் உட்பட நால்வரை, ஒரே இரவில் காவல் நிலையப் பணியிலிருந்து அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்துள்ளார் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. இந்த இடமாற்றத்திற்குக் காரணம், மணல் கடத்தல் கும்பல் மற்றும் சட்டவிரோத மது, கஞ்சா விற்பனை நபர்களுடனான தொடர்பே..? என கிசுகிசுத்து வருகின்றனர் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறையினர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கனகாபாய். இதே காவல் நிலையத்தில் தங்கச்சாமி, முத்துராமலிங்கம் மற்றும் பழனியாண்டி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்த காவல் நிலையத்திற்குட்பட்ட மலட்டாறு, கூராங்கோட்டை, எம்.கரிசல்குளம் மற்றும் மூக்கையூர் பகுதிகளில் திருட்டு மணல் கடத்தலும், மாரியூர் கடற்கரை, கடுகுசந்தை சத்திரம், நரிப்பையூர், கன்னிராஜபுரம் மற்றும் சாயல்குடியில் சட்டவிரோத மது மற்றும் கஞ்சா விற்பனைகள் பெருமளவில் நடந்து வந்துள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் பலர் பலமுறை புகாரளித்தும் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது இன்ஸ்பெக்டர் கனகாபாய் தலைமையிலான டீம். புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட எஸ்.பி.வருண்குமாருக்கு இப்பிரச்சனை தெரியவர, அதிரடியாக இன்ஸ்பெக்டர் கனகாபாய் உட்பட 4 பேரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். விவகாரம் பெரிதாகமால் இருக்க, " புகார்களை சரியாக விசாரிப்பதில்லை. அதனால் இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்" என இடமாற்றத்திற்கான காரணத்தையும் கூறி சமாளித்துள்ளது மாவட்ட காவல்துறை. எனினும், இடமாற்ற விவகாரத்தால் மாவட்ட காவல்துறைக்குள் பரப்பரப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.