சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் மரணமடைந்த விவகாரம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினையில் ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்ஸ் கைது செய்யப்பட்டதற்கு காரணமான புகாரை அளித்த காவலர் முருகன், ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில், ''நான் வேறு வழக்கின் விசாரணை சம்பந்தமாக வெளியில் இருந்தபோது சுமார் இரவு 8.15 மணிக்கு என்னை காவல் நிலையத்திற்கு அவசரமாக அழைத்தார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர். அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும் என்னிடம் ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்ஸ் மீது புகார் கொடுக்கும் படியும், அந்த புகாரில் கையொப்பம் இடும்படியும் நிர்பந்தம் செய்தார்கள்.
மேலதிகாரிகளின் கட்டளைக்கு பணிந்து அந்த புகாரில் கையொப்பமிட்டதை தவிர, எந்த விதத்திலும் இந்த வழக்கில் நான் சம்பந்தப்படவில்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' என மனுவில் கூறியுள்ளார்.