இன்று (அக்டோபர் 13) தியாகி சங்கரலிங்கனாரின் 63-வது நினைவு தினம். அவர் ஒரு மொழித்தியாகி ஆவார். அதுவும், மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 1956 ஜூலை 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 13-ஆம் தேதி வரை உண்ணாவிரதமிருந்து, அந்தக் கோரிக்கை நிறைவேறாமலேயே உயிர் நீத்தார்.
சங்கரலிங்கனாரின் நினைவு நாளில் நினைவலைகள் நம்மைப் பின்னோக்கி இழுக்கின்றன. வரலாறு தன் பக்கங்களைத் தானாகவே புரட்டுகிறது.
1895-ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி – வள்ளியம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் சங்கரலிங்கம். எட்டாம் வகுப்பு வரையிலும் படித்தார். 1908-இல் விருதுநகரிலுள்ள ஞானாதிநாத நாயனார் பள்ளியில் இவர் எட்டாம் வகுப்பு படித்தபோது, அதே பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்தார் காமராஜ். நாட்டு விடுதலையின் பால் சங்கரலிங்கத்துக்கு நாட்டம் ஏற்படுவதற்கு வ.உ.சி. காரணமாக இருந்தார். அதனால், விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
1914-ல் விருதுநகரில் பங்கஜ விலாச வித்தயாபிவர்த்திச் சங்கம் என்னும் அமைப்பை ஏற்படுத்தி, கல்வியில் பெண்கள் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டார் சுவாமி திருவாலவாயர். அச்சங்கத்தின் செயலாளராக இருந்தார் சங்கரலிங்கம். 1915-ல் செந்தியம்மாள் என்பவரை மணந்தார். தனது மகளுக்கு பங்கசம் என்று பெயரிட்டார். 1920-ல் மாதர் கடமை என்னும் நூலை எழுதி வெளியிட்டதன் மூலம் இவருக்கு ராஜாஜியுடன் தொடர்பு ஏற்பட்டது. அதே ஆண்டில், திருநெல்வேலியில் சென்னை மாகாண அரசியல் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் கலந்துகொண்டதோடு ராஜாஜியையும் சந்தித்துப் பேசினார்.
கதர் மட்டுமே உடுத்துவதென்று சங்கரலிங்கத்தின் குடும்பத்தினரும் முடிவெடுத்தனர். கதர் இயக்கத்தின் மீதான ஈடுபாட்டால், விருதுநகர் கதர் வஸ்திராலயம் என்ற பெயரில் கடை ஒன்றை இவரே திறந்தார். கதர் விற்பனையில் இவர் காட்டிய வேகத்தைப் பாராட்டி 26-4-1926-ல் பாராட்டுச் செய்தியே வெளியிட்டது சுதேசமித்திரன். அந்நாளில், சென்னை மாகாணத்தின் கதர் வாரியத் தலைவராகச் செயல்பட்டார், பின்னாளில் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி. அவரை விருதுநகருக்கு அழைத்து வந்து, த.இரத்தினசாமி நாடார் நினைவு வாசகசாலை சார்பில் பொதுக்கூட்டம் நடத்தினார் சங்கரலிங்கம். 1927-ல் மகாத்மா காந்தி விருதுநகருக்கு வந்தபோது சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தார். 1930-ல் காந்தி தண்டி யாத்திரை தொடங்கியபோது அவருடன் இவரும் மூன்று நாட்கள் பயணம் செய்தார்.
1930-31 காலக்கட்டத்தில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பல ஊர்களுக்கும் சென்று தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். திருச்சி சத்தியாக்கிரகப் போராட்ட வழக்கில் 6 மாத கடுங்காவல் தண்டையும், கரூர் வழக்கில் 6 மாத கடுங்காவல் தண்டயும் பெற்றார். தண்டனையை திருச்சி மத்திய சிறைச்சாலையில் அனுபவித்தார்.
1952-ல் தனக்குச் சொந்தமான இரு வீடுகளையும், சேமிப்பாக இருந்த ரூ.4000-ஐயும் விருதுநகர் சத்திரிய மகளிர் உயர் நிலைப்பள்ளிக்கு நன்கொடையாகத் தந்தார். அத்தொகையிலிருந்து பெறும் வட்டியை வைத்து, அங்கு பயிலும் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவாக உப்பில்லாக் கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். பிற்காலத்தில், தமிழக முதலமைச்சராகி காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்ததற்கு இதுவே வழிகாட்டியது.
உண்ணாவிரதமிருந்து உயிரையே தியாகம் செய்த சங்கரலிங்கனாரின் அன்றைய 12 அம்ச கோரிக்கைகள் என்னவென்று பார்ப்போம்!
1. மொழிவழி மாநிலம் அமைத்திட வேண்டும்
2.சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிட வேண்டும்.
3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்ய வேண்டும்.
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு மட்டுமே அளித்திட வேண்டும்.
5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிய வேண்டும்.
6.ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும்.
7.தேர்தல் முறையில் மாறுதல் செய்திட வேண்டும்.
8. தொழிற் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
9. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
10. விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.
11. மத்திய அரசு இந்தியை மட்டுமே பயன்படுத்தக் கூடாது.
12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்திட வேண்டும்.
எத்தனை லட்சியப்பிடிப்புள்ள மாமனிதராக வாழ்ந்திருக்கிறார் சங்கரலிங்கனார். இந்நினைவு நாளில் அன்னாரின் தியாகத்தைப் போற்றுவோம்!