வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து இராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்துக்கு புதிய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரை நியமித்துள்ளது தமிழக அரசு. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மயில்வாகனம் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து நவம்பர் 18ந்தேதி காலை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசியவர், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த மாவட்டம் தொழிற்சாலைகள் நிரம்பிய மாவட்டம். அதனால் மாணவர்கள், தொழிலாளர்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படும். பாலாற்றில் இருந்து மணல் கடத்துபவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகள், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருந்தி வாழ நினைக்கும் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். பொதுமக்கள் தைரியமாக வந்து புகார் தெரிவிக்கலாம். எந்த சிறு பிரச்சனையாக இருந்தாலும் புகார் வந்தால் உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் சிறு பிரச்சனை தான் நாளை பெரிய பிரச்சனையாக உருவாகிறது. காவலர் குடியிருப்பு, காவல்நிலையம் அமைத்தல் போன்ற பணிகள் படிப்படியாக செய்யப்படும் என்றார்.