சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள மும்முடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய இரண்டாவது மகன் ராஜா (வயது 45). கூலித்தொழிலாளியான இவருக்கு சரிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ராஜாவின் உடன் பிறந்த அண்ணன் பாலசுப்பிரமணி. அவரும் குடும்பத்துடன் ராஜாவின் வீட்டு அருகிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில், கிருஷ்ணனுக்குச் சொந்தமான 2 ஆயிரம் சதுர அடி நிலத்தை, கடந்த 2014ம் ஆண்டு பாலசுப்பிரமணி ஏமாற்றி, தனது பெயருக்கு கிரயம் செய்து கொண்டார். தொழில் செய்ய பணம் தேவைப்படுவதாகக் கூறி, நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கலாம் எனத் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய தந்தை, தம்பி ஆகியோரை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று நிலத்தை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
உடன் பிறந்த அண்ணனே தன்னை ஏமாற்றி விட்டாரே என்று நினைத்து நினைத்து மனம் வெதும்பிய ராஜாவுக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. கவலையில் இருந்து வந்த அவர் கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் ராஜாவின் உடலை அடக்கம் செய்ய வழியின்றி அவருடைய மனைவி சரிதா மற்றும் குழந்தைகள் தவித்தனர். இதையடுத்து, சொத்தில் தனது கணவருக்கு சேர வேண்டிய பங்கை கொடுக்கும்படி சரிதா திடீரென்று போர்க்கொடி தூக்கினார். இதற்கு பாலசுப்பிரமணி மறுத்ததால், தங்கள் குடும்பத்திற்கு சேர வேண்டிய பங்கை பிரித்துக் கொடுக்காத வரை கணவரின் சடலத்தை அடக்கம் செய்ய மாட்டேன் என்று கூறி, ராஜாவின் சடலத்தை தனது வீட்டிலேயே வைத்து கடந்த மூன்று நாட்களாக நூதன போராட்டத்தை நடத்தி வந்தார்.
அக்கம்பக்கத்தினர் சடலத்தை அடக்கம் செய்யும்படி கூறியும் சரிதா கேட்கவில்லை. தகவல் அறிந்த வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் சரிதாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து விசாரித்து சாதகமான தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததை அடுத்து, சரிதா தனது கணவரின் உடலை அடக்கம் செய்ய ஒப்புக்கொண்டார். அதன்படி ராஜாவின் உடல் கடந்த 18ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. சொத்தில் பங்கு கேட்டு கணவரின் சடலத்தை வைத்து மனைவி நூதன முறையில் போராட்டம் நடத்திய சம்பவம் மும்முடி, தலைவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.