சேலம் மாவட்ட மைய நூலகத்திற்குச் சொந்தமான இடத்தை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துக்கு ஒதுக்க கலெக்டர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியானதால், இந்து முன்னணி, பாஜகவினரும் தங்கள் அமைப்புகளுக்கும் கடை கட்டிக்கொள்ள இடம் ஒதுக்க வேண்டும் என்று நூலகத்துறையுடன் மல்லுக்கட்டில் இறங்கியுள்ளனர்.
சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பாலம் கட்டப்படுவதால், சேலம் மாவட்ட மைய நூலகத்தில் இருந்து பழைய பேலஸ் திரையரங்கு வரை சாலையின் இருபுறம் உள்ள நிலங்களில் கணிசமான பரப்பளவு கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில், பேலஸ் திரையரங்கம் எதிரில் இயங்கி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான நியூ செஞ்சுரி புத்தக நிலையம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள், நியூ செஞ்சுரி புத்தக நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் தரப்பில், தங்களுக்கு மாவட்ட மைய நூலக வளாகத்தில் சொந்தமாக கடை கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கித்தருமாறு தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் ராமன் ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு இடம் ஒதுக்குமாறு, முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து அழுத்தம் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, அரசு இருபாலர் கலைக்கல்லூரி அருகில் செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலக வளாகத்தில், ஆத்தூர் முதன்மைச் சாலையையொட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துக்கு 450 சதுர அடி நிலம் ஒதுக்க மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து, அந்த இடத்தை அவரும் கடந்த ஜூலை 31ம் தேதி நேரில் பார்வையிட்டார். அதே இடத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர்களுக்கான நூலகம் கட்ட நூலகத்துறை திட்டமிட்டுள்ள நிலையில், ஆட்சியரின் நடவடிக்கையால் நூலகத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கள் அதிருப்தியை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நூலகத்துறையினர் தடுமாறிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து, நக்கீரன் இணையத்தில் ஆகஸ்ட் 11- ம் தேதி விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள், நியூ செஞ்சுரிய புத்தக நிறுவனத்திற்கு ஒதுக்கப்படுவதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய அதே இடத்தை தங்கள் இயங்கத்திற்கும் புத்தக கடை கட்டிக்கொள்ள ஒதுக்கித்தர வேண்டும் என்று மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணியிடம் செவ்வாய்க்கிழமை (ஆக. 13) நேரில் மனு அளித்தனர். அவர்கள் கோரிக்கை மனு அளிப்பதற்கு வருவது குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த மாநகர நுண்ணறிவுப்பிரிவு மற்றும் எஸ்பிசிஐடி உள்ளிட்ட உளவுத்துறை காவல்துறையினரும் நூலக வளாகத்தில் கூடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்து முன்னணி தரப்பில் கோட்டத் தலைவர் சந்தோஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் கண்ணன், துணைத்தலைவர்கள் குணசேகரன், சந்திரய்யர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பாஜக மாவட்டத் தலைவர் கோபிநாத் ஆகியோர் நூலக வளாகத்தில் சுற்றிப்பார்த்தனர். எந்த ஒரு தனியார் அமைப்புக்கும் இடம் ஒதுக்கித் தரவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றும், அப்படியிருக்கும் பட்சத்தில் தங்கள் கட்சிக்கும், அமைப்புக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்து முன்னணி அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நூலக அலுவலர் ஆகியோருக்கு அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
சேலம் மாவட்ட மைய நூலக வளாகத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கித்தருவதாக அறிகிறோம். இது முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பானது. மேம்பாலம் கட்டுமானத்தால் அந்த நிறுவனத்தின் கடை பாதிக்கப்பட்டதற்காக அரசுக்குச் சொந்தமான இடம் ஒதுக்கப்படுவதாக இருந்தால், பாலங்கள், நெடுஞ்சாலைகளால் பாதிக்கப்படும் அனைவருக்கும் அரசு இடம் ஒதுக்கித்தர வேண்டும். வீடு இழந்தவர்கள் நாளை ஆட்சியர் அலுவலகத்தில் வீடு கட்டிக்கொடுக்கும்படி கேட்டால் அனுமதிக்க முடியுமா?
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான உடைமை. அக்கட்சிக்கு அரசு இடம் வழங்கினால் எதிர்காலத்தில் மற்ற எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அரசு இடம் ஒதுக்கித்தர முடியுமா? இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டிக்கிறோம். ஆட்சியரும், நூலகத்துறையும் இந்த நடவடிக்கையை கைவிடாவிட்டால், இந்து முன்னணி சார்பில் தொடர் போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.