இந்திய பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க கடந்த ஐமுகூ ஆட்சியின்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது பாஜக ஆட்சியிலும் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உருக்காலை, நஷ்டத்தில் இயங்குவதால் தனியார்மயமாக்கம் செய்வதாக அதற்குக் காரணங்கள் சொல்லப்பட்டன.
இந்நிலையில், செயில் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் உருக்காலை, மேற்கு வங்கத்தில் உள்ள அலாய் இரும்பாலை, கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்ரய்யா ஆகிய மூன்று ஆலைகளையும் தனியாருக்கு விற்க, உலகளாவிய ஒப்பந்தம் கோரி, ஜூலை 4ம் தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி மாலை 6 மணி வரை ஒப்பந்தம் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.

இதற்கு சேலம் உருக்காலை தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஆலையில் உள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். பாஜக அரசின் தனியார்மய நடவடிக்கையை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்தனர். மேலும், முதல்கட்டமாக ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜூலை 5, 2019) காலை 6 மணி முதல் தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இன்று காலை 6 மணிக்கு போராட்டம் நிறைவுபெற்றது. இதில், உருக்காலையில் பணியாற்றி வரும் 950 தொழிலாளர்களும் பங்கேற்றனர். ஆலையின் ஒவ்வொரு நுழைவு வாயில் முன்பும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பினர்.
தொமுச நிர்வாகி பெருமாள், சிஐடியு நிர்வாகி சுரேஷ்குமார் ஆகியோர் கூறுகையில், ''சேலம் இரும்பாலை உள்பட மூன்று ஆலைகளை தனியாருக்கு விற்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
முன்பு தொடர் போராட்டங்கள் நடத்தியபோது, அரசு தாமதித்து வந்தது. தற்போது விற்பனைக்கு ஒப்பந்தம் கோரியுள்ளது. நாங்கள் இதை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்துவோம்,'' என்றார்.