கொரோனா பரவலைத் தடுக்க சுய ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டதை அடுத்து, மக்கள் ஞாயிறன்று (மார்ச் 22) வீடுகளில் முடங்கியதால் சேலம் மாவட்டம் மொத்தமாக வெறிச்சோடியது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொடுவதன் மூலமும், இருமல், தும்மல் மூலமும் பரவும் என்பதால், நோய்த் தொற்றைத் தவிர்க்க ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) ஒரு நாள் சுய ஊரடங்கைப் பின்பற்றுமாறு பிரதமர் அறிவித்தார்.
![salem](http://image.nakkheeran.in/cdn/farfuture/Pr_J7r8joO2N9popwSBJSMfFk9OwIfhJo_M6dK2BVng/1584905048/sites/default/files/inline-images/w21_0.jpg)
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, ஒட்டுமொத்த இந்திய மக்களும் சுய ஊரடங்கைப் பின்பற்றினர்.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை இன்று கடைகள், அரசு, தனியார் வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் திறக்கப்படவில்லை. காய்கறி கடைகள், உணவகங்களும் மூடப்பட்டன. இதனால் சேலம் மாவட்டத்தில் முக்கிய சாலைகளில்கூட மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. கடையடைப்பு போன்ற காலங்களில்கூட சாலைகளில் ஆள்கள் நடமாட்டம் இருக்கும். ஆனால், கொரோனா பீதியால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பலரும் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் டி.வி.,க்களில் சினிமா உள்ளிட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்தும், குழந்தைகளுடன் விளையாடியும் பொழுது போக்கினர்.
பேருந்துகள், லாரிகள், ரயில்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன. மதுக்கடைகளும் மூடப்பட்டன.
எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கக்கூடிய முதல் அக்ரஹாரம், இரண்டாம் அக்ரஹாரம், கடை வீதி, பழைய, புதிய பேருந்து நிலைய பகுதிகள், செவ்வாய்ப்பேட்டை, லீபஜார், உழவர் சந்தைகள், சூரமங்கலம் ரயில் நிலையம், 4 சாலை, 5 சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில்கூட ஆள்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. பிரசித்தி பெற்ற வ.உ.சி. பூமார்க்கெட் சுய ஊரடங்கையொட்டி மூடப்படுவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால், அங்கும் வியாபாரிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஏற்கனவே மேட்டூர் அணைப்பூங்கா கரோனா பீதியால் மூடப்பட்டது. மேட்டூர் உழவர் சந்தை, சதுரங்காடி, அணைக்கட்டு முனியப்பன் கோயில் பகுதிகளும் ஆள்கள் நடமாட்டமின்றி காற்று வாங்கின.
பூங்கா, திரையரங்கம், விளையாட்டு மைதானங்கள், கோயில்கள், மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கேளிக்கை, பொழுதுபோக்குக்குரிய இடங்களும் மூடப்பட்டதால் முதன்முதலாக மக்கள் வீடுகளில் நாள் முழுக்க முடங்கிக் கிடந்தது புது அனுபவமாக இருந்ததாக பலர் கூறினர்.
![selam](http://image.nakkheeran.in/cdn/farfuture/kfOyeuGNPw0yOq3TZgLqgMhwet0-XW6xt8CT2oeE3jc/1584905081/sites/default/files/inline-images/w22.jpg)
அதேநேரம், வீடற்றவர்கள், தெருவோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களின் நலன் கருதி சேலம் மாநகராட்சியில் அனைத்து அம்மா உணவகங்களும் திறக்கப்பட்டு இருந்தன. காலையில் 1200 இட்லிகள் தயாரித்து வழங்கப்பட்டன. மதியம் தலா 300 தயிர் சாதம், சாம்பார் சாதம் தயாரித்து வழங்கப்பட்டது. இதையறிந்த பொதுமக்கள் பலரும் அம்மா உணவகங்களில் திரண்டதால் கூடுதல் உணவு தயாரித்து வழங்கப்பட்டது. வழக்கம்போல் தயிர் 3 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் வழங்கப்பட்டது.
அனைத்து உணவகங்களும் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அம்மா உணவகம் பலரின் பசியாற்றியது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.