சேலத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மா உணவகங்களில் தேவையான உணவுப்பொருள்களை தயார் செய்வதற்காக பணியாளர்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
'நிவர்' புயல் மற்றும் தொடர் மழை சேதங்களில் இருந்து மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தமிழக அரசு மாநிலம் முழுவதும் முடுக்கி விட்டுள்ளது.
சேலத்தைப் பொருத்தவரை, மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் புயல் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இப்பணிகளை ஆணையர் ரவிச்சந்திரன் நவ.25- ல் நேரில் ஆய்வு செய்தார்.
அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட குமரகிரி ஏரி உபரி நீர் வழித்தடம், வெள்ளைக்குட்டை ஓடை, அசோக் நகர், ஆறுமுகம் நகர், அஷ்ட லட்சுமி நகர், பச்சைப்பட்டி, தாதம்பட்டி ஆட்டோ காலனி, சிலோன் காலனி, சீலாவரி ஏரி, சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட சின்னேரி வயல்காடு ஓடை, பள்ளப்பட்டி ஓடை, புது சாலை ரயில் நகர், ரெட்டிப்பட்டி உள்ளிட்ட தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ள தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் அடைப்புகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டார். அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
நான்கு மண்டல அலுவலகங்களிலும் அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக மண்டல உதவி ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆணையர் கூறுகையில், ''தாழ்வான பகுதிகளில் நீர் தடையின்றி வெளியேற ஏதுவாக, அனைத்து நீர் வெளியேற்று பாதைகளையும் விரைந்து சீர் செய்ய வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைப்பதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
தேவையான உணவுகளை தயார் செய்ய அம்மா உணவகப் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காற்றில் பெரிய விளம்பர பதாகைகள் கீழே சாய்ந்து பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க, அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்,'' என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.