Skip to main content

சேலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020


கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சேலத்தில் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தோனேஷியாவில் இருந்து சேலத்திற்கு வந்த முஸ்லிம் மத போதகர்கள் குழுவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் என 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்குச் சேலம் அரசு மருத்துவமனையின் தனிமை வார்டில் , தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

salem district coronavirus strength 14 admit government hospital


இதையடுத்து, டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்களில் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் (ஏப். 8) தெரிய வந்தது. அவரும் டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் சேர்த்து நேற்று முன்தினம் (ஏப். 8) வரை மொத்தம் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று (ஏப். 9) சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த மேலும் ஒரு பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இவரையும் சேர்த்து சேலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
 

http://onelink.to/nknapp


சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் கூறுகையில், ''சேலத்தில் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்புக்கு 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்குப் புரதச் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைவரின் உடல்நலமும் நன்றாக உள்ளது. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள். கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. சேலம் அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உள்ளன,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்