சேலத்தில், நோய்த்தொற்று அபாயமுள்ள 17 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் இலவசமாக கபசுர குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய்த்தடுப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவதோடு, அவர்கள் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட 15 கோட்டங்களில் 17 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதிகளில் தீவிர நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தினமும் 5 வேளைகளில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திடும் வகையில் ஹோமியோபதி மாத்திரைகள் மற்றும் வீடுகளைத் தூய்மையாக பராமரிப்பதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் பிளீச்சிங் பவுடர்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
கட்டுப்படுத்தப்பட்ட 17 இடங்களிலும் வெளியாள்கள் உள்ளே செல்வதற்கும், அப்பகுதிகளில் வசிப்பவர்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காகவோ அல்லது பிற எவ்வித நிகழ்விற்காகவும் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பால் மற்றும் மருந்து பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அஸ்தம்பட்டி மண்டலம் 6- ஆவது கோட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான பிரகாசம் நகரில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கும் சேவையை ஆணையர் சதீஷ் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30- ஆம் தேதி) துவக்கி வைத்தார். அனைத்துக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்டு கபசுர குடிநீரை பருகியும் மற்றும் தங்களுக்கு வழங்கப்படும் ஹோமியோபதி மாத்திரைகளை உரிய இடைவெளியில் உட்கொண்டு, நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.