சேலத்தில், டிப்தீரியாவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த பிளஸ்2 மட்டுமே படித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். தவறான சிகிச்சையால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். சிறுவனுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 5 வகையான மருந்து கலந்து ஊசி போட்டுள்ளனர்.
ஆனாலும், காய்ச்சலின் தீவிரம் குறையவில்லை. அதையடுத்து அம்மாபேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுவனை பெற்றோர் அழைத்து சென்றனர். முதல்கட்ட சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
சிறுவனுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில், அவனுக்கு தொண்டை அடைப்பான் (டிப்தீரியா) பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி நவ. 5- ஆம் தேதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மாநகராட்சி நிர்வாகம், அந்த சிறுவன் வசித்த பகுதியில் நோய்த்தடுப்புப் பணிகளில் ஈடுபட்டது.
இதற்கிடையே, சிறுவனுக்கு முறையான பரிசோதனை செய்யாமல், 5 மருந்து கலந்து கொடுத்து ஊசி போட்டது போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜனனி, அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறை விசாரணையில், அம்மாபேட்டை பெரிய கிணறு தெருவைச் சேர்ந்த ராஜா (47) என்பவர்தான் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர் என்பதும், பிளஸ்2 வரை மட்டுமே படித்துவிட்டு அப்பகுதி மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.