சேலம் மத்திய சிறையில் போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி, திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் செண்பகமாதேவியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (36). இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவர் தன் நண்பருடன் சேர்ந்து 17 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. அதன்பேரில், சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் கடந்த ஆண்டு மே மாதம் அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை, சேலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (பிப். 23) அதிகாலை 05.00 மணியளவில், சேலம் மத்திய சிறையில் வார்டன்கள் ஆய்வு செய்தனர். அப்போது 8- வது தொகுதியில் அடைக்கப்பட்டிருந்த அசோக் குமார், மின்விசிறியில் வேட்டியால் தூக்கிட்டு, சடலமாகத் தொங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து சிறை வார்டன்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அஸ்தம்பட்டி காவல்நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட அசோக் குமாருக்கு, ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடிவடையும் நிலையில் இருந்தது. எப்படியும் இந்த வழக்கில் தனக்கு ஆயுள் தண்டனை கிடைத்துவிடும் என்ற பயத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது. அதனால் விரக்தி அடைந்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுதவிர, வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை கைதி தற்கொலை செய்தகொண்ட சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணையும் நடந்து வருகிறது.