சேலத்தில் தொடர்ந்து வழிப்பறி, திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை மாநகர காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் பொன்னம்மாபேட்டை சக்தி நகரைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் என்கிற கார்த்திகேயன் (23). கடந்த ஜூலை 21ம் தேதி, சேலம் பழைய பேருந்து நிலையம் ஆள்கொல்லி பாலம் அருகே நடந்து சென்ற ஒருவரிடம் வீச்சரிவாளைக் காட்டி பணம் பறிக்க முயன்றார். பொதுமக்கள் அவரை பிடிக்க முயன்றபோதும் அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார். இந்த வழக்கில் கார்த்திக்கை கைது செய்த சேலம் நகர காவல்துறையினர், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த 2018ம் ஆண்டு, டிசம்பர் 9ம் தேதியன்று, கன்னங்குறிச்சி சரகத்தில் ஒரு பெண்ணிடம் கால் பவுன் நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கத்தி முனையில் பறித்துக்கொண்ட வழக்கில் ஏற்கனவே கார்த்திக் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த கார்த்திக் தனது கூட்டாளிகளுடன் கடந்த மாதம் 13ம் தேதியன்று, ஏற்காடு முதன்மைச் சாலையில் உள்ள ஒரு ஜோதிடரின் வீட்டில் நுழைந்து கத்தி முனையில் அரை பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
கைது, சிறைக்குப் பிறகும் தன்னை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டதால் கார்த்திக்கை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேலம் நகர காவல் ஆய்வாளர் சரவணன், மாநகர துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோரின் ஆணையருக்கு பரிந்துரை செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில் கார்த்திக்கை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது ஆணையை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கார்த்திக்கிடம் காவல்துறையினர் நேரில் சார்வு செய்தனர்.