ரயில்வே துறை சார்ந்த ஜி.டி.சி.இ (GDCE) தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்ற அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல கட்சி தலைவர்கள் ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இதனை அடுத்து, ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரயில்வே துறை சார்ந்த ஜி.டி.சி.இ (GDCE) தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என்ற அறிவிப்பை இன்று வெளியிட்டது. இது தொடர்பான விளக்க கடிதத்தை ரயில்வே வாரியம், அனைத்து மண்டல ரயில்வே மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ளது.
இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரயில்வேயில் துறைசார்ந்த GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! தமிழ் மொழிக்காக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் போராடும்!” என்று பதிவிட்டுள்ளார்.