வேலூரில் பிரபல ரவுடி வசூர் ராஜா. காட்பாடி வண்டறந்தாங்கலை சேர்ந்தவர் ரவுடி ஜானி. இவர்கள் மீது பல்வேறு கொலை, ஆள்கடத்தல், கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த இருவரும் திடீரென தலைமறைவாகிவிட்டனர். தலைமறைவான அவர்கள் இருவரும் தங்களது கும்பலை விரிவுப்படுத்த தொடங்க விட்டனர். மேலும் தொழிலதிபர்கள், இளம் பெண்களை கடத்தி அவர்களது குடும்பத்தினரிடம் பணம் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் இதுதொடர்பாக புகார் தரவில்லை. சிலர் தைரியமாக புகார் தந்துள்ளனர்.
வேலூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை கடந்த வாரத்துக்கு முன்பு கடத்திய ரவுடி ஜானி கும்பல் அவரை சரமாரி அடித்து துன்புறுத்தியது. மேலும் இந்த காட்சிகளை வீடியோ எடுத்து தொழிலதிபரின் குடும்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில், எப்படியாவது கேட்கும் பணத்தை புரட்டி கொண்டு வந்து என்னை மீட்டு செல்லுங்கள். இல்லாவிட்டால், கொன்று விடுவார்கள் என்று தொழிலதிபர் அழுது புலம்பியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பணம் கொடுத்து தொழிலதிபரை மீட்டு சென்றுள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் போலீசார் வசம் சென்றது. அந்த குடும்பத்தாரை சந்தித்து புகாரை பெற்றது போலிஸ்.
அதேபோல் வேலூர் - ஆற்காடு சாலையில் உள்ள மருந்து கடை உரிமையாளரின் மகளை கடத்திய ரவுடி கும்பல் ரூ.5 லட்சம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுப்போன்ற தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்த போலீசார், ஜானி கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
இது போன்று ரவுடிகள் வசூர் ராஜா, ஜானி ஆகியோரது நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக அவர்களது கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ராஜாவின் தளபதியான தலைமறைவான காட்பாடி அடுத்த கல்புதூரை சேர்ந்த வினோத் என்பவரை தேடி வருகின்றது தனிப்படை.
மேலும் அடுக்கடுக்கான புகார்கள் வரத்தொடங்கியுள்ளதால் ரவுடிகள் வசூர் ராஜா, ஜானி ஆகியோரை உடனடியாக பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக - ஆந்திர எல்லை கிராமங்களில் துப்பாக்கியை பயன்படுத்தி ரவுடி ஜானி காட்டுப்பன்றிகளை வேட்டையாடியதாக ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு தகவல் அளித்துள்ளது. இதனால், ரவுடி ஜானி கும்பலிடம் துப்பாக்கி இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனால் இவர்களை பிடிக்க முயலும்போது எதிர்தாக்குதல் நடத்தலாம் என முடிவு செய்த அதிகாரிகள் ரவுடிகளை சுட்டு பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் கசியவிட்டுள்ளனர்.
ரவுடி ஜானி, வேலூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் குடும்பத்தால் உருவாக்கப்பட்டவர். அந்த குடும்பத்துக்கு தற்போதைய அதிமுக எம்.பி மிகமிக நெருக்கம் என்பது கட்சி மற்றும் காவல்துறை வட்டாரத்துக்கு நன்றாக தெரியும் என்பது குறிப்பிடதக்கது.
- ராஜ்ப்ரியன்.